போர் கலையின் உச்சமே எதிரியுடன் போர் செய்யாமலேயே அவனை வெல்வது தான் என்ற போரின் தத்துவத்தை கி.மு. 544-இல் தனது போர் கலை என்ற நூலில் கூறியிருக்கிறார் சீனாவின் புகழ்பெற்ற போர் தளபதி சன் சூ. இந்த பொன்மொழி தற்போது சிங்கப்பூரில் நடந்து முடிந்த டொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு மிகவும் பொருந்தும். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்சூழல் உச்சத்தை தொட்டது. திடீர் திருப்பமாக எல்லாம் மறந்து சிங்கப்பூரில் இருவரும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர். 68 ஆண்டுகால பகை மெல்ல அமைதிக்கு திரும்பியிருக்கிறது.

trump-kim

இரண்டாம் உலக போருக்கு பின்னர் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி போல கொரியா போரினால் வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. வடகொரியா சோவியத் ரஷ்யா ஆதரவுடன் கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. தென்கொரியா அமெரிக்காவின் ஆதரவுடன் ஜனநாயக ஆட்சி அமைத்தது. சோவியத் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த பனிப்போர் கொரிய தீபகற்பத்தில் எதிரொலித்தது. ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்துவருகின்றன. உலகில் ஆதிக்கம் செலுத்துவது யார் அமெரிக்காவா சோவியத் யூனியனா என்ற நிலையில் நடந்த பனிப்போரில் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மாறிவிட சோவியத் யூனியன் சிதறிபோனது. அதன் பின்னர் அமெரிக்கா உலகின் ஆதிக்கம் மிக்க வலிமையான நாடாக மாறியது. ராணுவம்,பொருளாதாரம், அறிவியல்-தொழில்நுட்பம், விண்வெளி, ஹாலிவுட் சினிமா என உலகின் முதன்மை நாடாக மாறிவிட்டது. உலக போலீஸ்காரன் என வர்ணிக்கப்பட்டது அமெரிக்கா. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்க உலகின் உச்ச வல்லரசாக வலம் வந்தது. தனது அதிகாரத்தை பொருளாதார நலனுக்காக பயன்படுத்திக்கொண்டது. சோவியத் ரஷ்யா, சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, ஆப்கானிஸ்தான் போன்ற கம்யூனிஸ நாடுகளுக்கு எதிராக செயல்பட்டது அமெரிக்கா.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல உள்நாட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தியது. உலகின் பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் அமைப்பை பலவீனப்படுத்தியது. பெட்ரோல் உற்பத்தி நாடுகள் மீது போர் நடத்தி தனக்கு ஆதரவான அரசை அமைத்துக்கொண்டது. இன்னொரு புறம் செர்பியா, ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக், லிபியா, சிரியா, நாடுகளில் போர் மூலம் தனக்கு ஆதரவான அரசை அமைத்தது. 1972 இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போர்கப்பலை வங்காள விரிகுடாவில் நிறுத்தியது அமெரிக்கா. சோவியத் ரஷ்யா இந்தியாவிற்கு உதவியாக நீர்மூழ்கி கப்பலை அனுப்பிதோடு, அமெரிக்காவை எச்சரித்தது. ஐ.நா. சபையில் இந்தியாவிற்காக ஆதரவு குரல் எழுப்பியது. அப்போது சோவியத் ரஷ்யா ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா உடைந்திருக்கும்.

இப்படிப்பட்ட அமெரிக்கா தான் கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் ஆதரவுடன் 68 ஆண்டுகளாக போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.

சோவியத் ரஷ்யா சிதைவுக்கு பின்னர் உலகில் அமெரிக்காவுக்கு எதிரான வலிமையான நாடாக மாறிவரும் சீனா கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தை விரும்பவில்லை. அதனால் சித்தாந்த ரீதியாகவும் அமெரிக்காவின் எதிரி நாடு என்ற வகையிலும் வடகொரியாவை ஆதரிக்கிறது. பொருளாதார வர்த்தக உதவிகளை செய்து வருகின்றது. இன்று உலகின் உச்ச வலிமை நாடாக இருந்து வரும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் பனிப்போர் களமாக வடகொரியா இருந்துவருகிறது. சுருக்கமாக சொன்னால் தென்கொரியா அமெரிக்காவின் அடியாள் என்றால் வடகொரியா சீனாவின் அடியாள் அவ்வளவுதான்.

இப்போது வடகொரியாவின் கோரிக்கை என்பது தம் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்கவேண்டும். தென் கொரியாவில் ராணுவத்தை நிறுத்தி போர்சூழலை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா அதை வாபஸ் பெறவேண்டும்.

ஆனால் அமெரிக்காவோ வடகொரியாவால் தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் ஆபத்து உள்ளது. இருநாடுகள் பாகாப்புக்காகத்தான் அமெரிக்கா ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்கிறது. இருந்தும் அமெரிக்காவால் நேரடியாக வடகொரியா மீது போர்தொடுக்க முடியவில்லை. காரணம் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு பக்கபலமாக இருப்பதுதான்.

இப்போது வரலாறு மாறிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக வடகொரியாவை மிரட்டி வந்த அமெரிக்கா, வடகொரியா அணுகுண்டு மிரட்டல் மூலம் பயந்து தான் போய் விட்டது. என்னதான் எதிரிநாட்டை அழித்தாலும் தனது நாட்டில் ஒரு பகுதி அழிந்துபோக எந்த நாடுதான் விரும்பும். அந்த நிலைதான் அமெரிக்காவுக்கும். அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு நாடும் இப்படி நேரடியாக போர் மிரட்டலை விட்டதில்லை. அடுத்தடுத்த அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு என்ற வடகொரியாவின் ராணுவ வலிமை அமெரிக்காவை கதிகலங்க வைத்துவிட்டது. இத்தனை ஆண்டு அமெரிக்கா போரில் தனது நாட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லாத அளவில்தான் போர் நடவடிக்கையில் ஈடுபட்டது. இப்போது வடகொரியாவிடம் அமெரிக்கா பின்வாங்கியதை அமெரிக்க பத்திரிக்கைகள் தெளிவாக வெளியிட்டன. அதனால் தான் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை விஷயத்தில் கூட அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிபாடுத்தான் இனி அணுகுண்டு அபாயமில்லை நிம்மதியாக தூங்கலாம் என டிரம்ப் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தியது வரலாற்றின் திருப்புமுனை. அமெரிக்காவை பொறுத்தவரை இரண்டு அணுகுமுறைகள் பயன்படுத்தும். ஒன்று பலவீனமான நாடுகளை போர் செய்து தனது அதிகாரத்திற்குள் கொண்டு வந்துவிடும். இரண்டு பலமான நாடுகள் என்றால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துவிடும். இப்படிதான் 1972-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்ஸன் சீனத் தலைவர் மாசே துங்வுடன் பேச்சுவார்த்தை நடத்தனார். 1986-இல் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் சோவியத் ரஷ்யா அதிபர் மிகையில் கோர்பச்சேவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். 2007-ஆம் ஆண்டு பராக் ஒபாமா இதே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரானார்.

அமெரிக்க செனட் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆக டிரம்ப், கிம் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையும் இப்படிபட்டதுதான்.

அணுகுண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகளை பயன்படுத்தினால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்பது இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்ற கிம் ஜாங் உன்னுக்கு தெரியாமலில்லை. சீனா, தென்கொரியா, ஜப்பான் போல பொருளாதார ரீதியாக முன்னேற தடையாக இருந்துவருவது வடகொரியா மீதான பொருளாதார தடை. அதை நீக்க அமெரிக்காவுடன் பேசுவதை தவிர வழியே இல்லை என்று முடிவுக்கு வந்தார். தனது தாத்தா கிம் இல் சுங் தந்தை கிம் ஜாங் இல் போன்று இல்லாமல் மாறுபட்டவர் கிம். என்னதான் அமெரிக்கவின் எதிரியாக இருந்தாலும் அமெரிக்காவின் கால்பந்து வீரர்களின் ரசிகர். அவர்களுடன் இன்னும் நட்புணர்வோடு பழகிவருபவர். வடகொரியாவின் ராணுவ வலிமையை அதிகரித்தாலும் அதன் முதல் கட்டமாக தென்கொரியாவுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி ரஷ்யா, சீனாவுடன் ஆதரவை பெற்றது தான் கிம் அயல்நாட்டு கொள்கையின் தெளிவு. இந்த பேச்சுவார்த்தை மூலம் ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் தற்காலிக அமைதி ஏற்பட்டுள்ளது. இதை தனிமனிதனாக கிம் ஜாங் உன் சாதனையாக வடகொரியா அறிவித்துள்ளது.

இன்னொருபுறம் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கம் குறைந்து வருவதும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதும் இப்போதல்ல. இலங்கை உள்நாட்டு போரில் சீனா பெரிய அளவில் சதி செய்தது.

அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிய விடுதலைபுலிகளை வீழ்த்த சீனாவின் ஆதரவை பெற்றது ராஜபக்சே அரசு. இலங்கை சீனாவுடன் நெருங்கியதும் அதன் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டதும் இரண்டு நாடுகளுக்கும் பௌத்த மதம் இணைப்பாக இருந்தது. தெற்காசியாவில் மாறிய வல்லரசு அதிகாரத்தில் ஈழப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்டது. இந்தியாவும் சீனாவை பின்பற்றி இலங்கைக்கு உதவியது.

இந்த சிங்கப்பூர் பேச்சுவார்த்தை கூட நிரந்தரமான தீர்வு எதுவும் தரவில்லை. வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில் விரிவான தகவல் இல்லை. ஆனாலும் ஒரு சமாதான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருக்கிறது. ஆக இனி எல்லாம் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம்தான். ஆப்பிரிக்க கண்டத்தை ஏற்கனவே வளைத்துவிட்டது சீனா. பட்டு சாலை, கண்டம் தாண்டிய ரயில் போக்குவரத்து மூலம் ஐரோப்பிய நாடுகளுடன் நட்பு பாராட்டி வருகிறது. ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

----------------------------------------

டிரம்ப்-கிம் உச்சிமாநாட்டின் முக்கிய பிரகடனங்கள்

* கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

Advertisment

* ஏப்ரல் 27, 2018-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப் படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.